

பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் தெருவில் வசித்து வருபவர் செல்வம் (வயது 41). இவர். தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திண்டிவனத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினார். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் கொடுங்கையூர் வந்தார்.
அப்போது ஆட்டோவில் இருக்கைக்கு பின் புறம் வைத்திருந்த பையை எடுக்க தவறிவிட்டார். அதில் 10 பவுன் நகை இருந்தது. சிறிது நேரம் கழித்துதான் ஆட் டோவில் நகையை தவறவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் செல்வம் வீட்டுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் வந்தது வியாசர்பாடியை சேர்ந்த ரஞ்சித் (35) என்பவரது ஆட்டோ என்பது தெரிய வந்தது. அவரை செல்போனில் தொடர்புகொண்டு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அவர் ஆட்டோவில் சோதனை செய்தபோது செல்வம் தவறவிட்ட நகை இருந்த பை இருப்பது தெரிந்தது. அந்த பையை கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். கொடுங்கையூர் போலீசார் நகை இருந்த பையை செல்வத்திடம் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர் ரஞ்சித்துக்கு செல்வம் மற்றும் அவரது மனைவி நன்றி தெரிவித்தனர். போலீசாரும் ஆட்டோ டிரைவரை பாராட்டினார்கள்.