ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு: 2 பேர் கைது

சென்னை அருகே எண்ணூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர், ஆட்டோவுக்கு கியாஸ் நிரப்புவதற்காக திருவொற்றியூர் பலகை தொட்டிகுப்பம் அருகே எண்ணூர் விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கைது
Published on

சென்னை,

சென்னை அருகே எண்ணூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 19). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு ஆட்டோவுக்கு கியாஸ் நிரப்புவதற்காக திருவொற்றியூர் பலகை தொட்டிகுப்பம் அருகே எண்ணூர் விரைவுச் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர் கையை காட்டி ஆட்டோவை நிறுத்தினர். சவாரி செல்ல வேண்டும் என்று கூறிய 2 பேரையும் பிரவீன் ஆட்டோவில் ஏற்றினார்.

சிறிது தூரம் சென்றதும், ஆட்டோவில் ஏறிய மர்ம நபர்களில் ஒருவர் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காண்பித்து பிரவீனிடம் பணம் கேட்டு மிரட்டினார். பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரத்தில் பிரவீன் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு, அவர் கையில் வைத்திருந்த ரூ.1,000 மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இதைப்பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காயம் அடைந்த பிரவீன் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த நரேஷ்(20) மற்றும் கார்த்தி(21) என்பதும், பிரபல வழிப்பறி திருடர்கள் என்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com