ஆட்டோ டிரைவர்கள் நலவாரியங்களில் சேர வேண்டும்; முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுரை

ஆட்டோ டிரைவர்கள் நலவாரியங்களில் சேர்ந்து பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கினார்.
ஆட்டோ டிரைவர்கள் நலவாரியங்களில் சேர வேண்டும்; முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுரை
Published on

ஆட்டோ டிரைவர்கள் நலவாரியங்களில் சேர்ந்து பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஈரோட்டில் நடந்த விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கினார்.

'நண்பனின் நலம்' திட்டம்

சக்தி மசாலா நிறுவனத்தின் சக்தி தேவி அறக்கட்டளை மூலம் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'நண்பனின் நலம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மூலம் ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று ஈரோடு பழையபாளையத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் டி.முருகேசன் வாழ்த்தி பேசினார்.

வெ.இறையன்பு

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு நலவாரிய அட்டைகள் மற்றும் சீருடைகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்கு என மொத்தம் 18 நலவாரியங்கள் உள்ளன. இந்த நலவாரியங்களில் தொழிலாளர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் நலவாரியத்தில் தங்களை இணைத்துக்கொள்வதன் மூலம் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். நலவாரிய அடையாள அட்டை மற்றும் உதவிகள் வழங்கப்படும். முன்காலத்தில் முகவரி தெரியாத ஒரு நகருக்கு சென்றால் சரியாக கொண்டு சேர்ப்பவர்கள் ஆட்டோக்காரர்கள் என்ற பெயர் உண்டு.

ஆயுள்காப்பீடு

ஆட்டோ டிரைவர்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். தாங்கள் ஆட்டோ ஓட்டும் நகரம், மாவட்டம் தொடர்பான விவரங்கள், முக்கிய சுற்றுலாதலங்கள், சிறந்த விடுதிகள் குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். தாங்கள் தூய்மையாக இருப்பதுடன், ஆட்டோக்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டும். உங்கள் ஆட்டோவில் அவர்களின் பயணம் மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்க வேண்டும். தொழிலில் கவனம் செலுத்துவதுபோல குடும்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஆயுள்காப்பீடு கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கி பேசினார்.

100 பெண்கள்

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 100 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளித்து, ஆட்டோ வாங்க தமிழக அரசின் மானியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈரோடு கலெக்டருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆட்டோ டிரைவர்களுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை சக்தி மசாலா நிர்வாக இயக்குனர் பி.சி.துரைசாமி, இயக்குனர் சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் மற்றும் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com