

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகிலுள்ள மஞ்சள் நாயக்கன்பட்டி, கீழத்தெருவைச் சேர்ந்த பொம்முசாமி மகன் விஜயகுமார் (வயது 32), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று மாலை, சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 11 பேரைத் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
பின்னர் அவர்கள் அனைவரும் இரவு ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் சோழபுரம் கிராமத்திற்குத் தனது ஆட்டோவில் புறப்பட்டுள்ளனர். தூத்துக்குடி- மதுரை 4 வழிச்சாலையில் எப்போதும்வென்றான் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு வந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் பின்பக்கத்தில் ஆட்டோ பயங்கரமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சோழபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி கிருஷ்ணலீலா (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த பவதாரணி(11), பாக்கியலட்சுமி(17), ராஜா வர்ஷினி(14), மகாலட்சுமி(19), சுபாஷினி(21), மகாலட்சுமி(47), சீதாலட்சுமி(19), ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார், கார்த்திக்(20), ஸ்டீபன்ராஜ்(19) ஆகிய 10 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்று திரும்பிய குடும்பத்தில் நிகழ்ந்த இந்த உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.