சில்லறை இல்லை என்று கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம்... ஐதராபாத்தில் ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை

சில்லறை விவகாரத்தால் ஆட்டோவில் பயணித்த பெண்ணுக்கும், ஆட்டோ டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
சில்லறை இல்லை என்று கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம்... ஐதராபாத்தில் ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் வட்டேபள்ளி பகுதியில் நேற்று பிற்பகலில் பெண் ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்துவிட்டு, பயணத்திற்கான கட்டணமான 20 ரூபாயை கொடுப்பதற்காக தன்னிடம் இருந்த 200 ரூபாய் தாளை ஆட்டோ டிரைவரிடம் நீட்டியுள்ளார். அந்த டிரைவரோ, தன்னிடம் 200 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து அந்த பெண் அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்று 200 ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார். அங்கு 100 ரூபாய் தாள்கள் மட்டுமே கிடைத்ததால், அதனை வாங்கிக் கொண்டு ஆட்டோ டிரைவரிடம் 100 ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் அந்த டிரைவர் தன்னிடம் சில்லறையே இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் அந்த பெண் எரிச்சலடைந்து ஆட்டோ டிரைவரை திட்டியுள்ளார். இதையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண் செல்போன் மூலம் தனது மகனை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கிடையில் ஆட்டோ டிரைவர் 20 ரூபாய் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்றார்.

ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு சென்ற பிறகு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவருக்கு பழக்கமான மற்றொரு ஆட்டோ டிரைவர் ஒருவர் பேசி, அருகில் உள்ள ஓட்டலுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். இதையடுத்து ஆட்டோ டிரைவர் அந்த ஓட்டலுக்கு சென்றபோது, அங்கு அடையாளம் தெரியாத 3 நபர்கள் அவரை கன்னத்தில் அறைந்து, சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

இந்த தாக்குதலால் ஆட்டோ டிரைவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்தார். இருப்பினும் அந்த 3 நபர்கள் விடாமல் அவரை தாக்கிய நிலையில், சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். அவரை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடியதை அடுத்து, அருகில் இருந்தவர்கள் ஆட்டோ டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சில்லறை விவகாரத்தால் ஆட்டோவில் பயணித்த பெண்ணுக்கும், ஆட்டோ டிரைவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், அந்த பெண்ணின் மகன் தனது 2 கூட்டாளிகளோடு சேர்ந்து ஆட்டோ டிரைவரை அடித்துக் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட 3 நபர்களில் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மற்றொரு நபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com