அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காயமடைந்தவர்கள் விவரம் வெளியீடு

முதல் பரிசாக வீரருக்கு காரும்,காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மதுரை,
ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் நடக்கும். அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் உலக அளவில் சிறப்பு பெற்றவை.
அதன்படி பொங்கல் பண்டிகை தினமான இன்று (15-ந் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 1,100 காளைகளும், சுமார் 600 வீரர்களும் களத்தில் உள்ளனர்.
வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளின் திமிலை காளையர்கள் அடக்கி வருகின்றனர். முதல் பரிசாக வீரருக்கு காரும்,காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றதில் 428 காளைகளில் 29 காளைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றுகளாக போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 சுற்றுகள் முடிவடைந்துள்ளன.
5-வது சுற்று முடிவில் 464 மாடுகள் களம் கண்ட நிலையில், 109 மாடுகள் மட்டும் பிடிபட்டன. இதில் 16 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அய்யனார்குளத்தை சேர்ந்த விஜயகுமார் 5 காளைகளும், அரவிந்த், குன்னத்தூர் - 4 மாடுகளும், பொன்பாண்டி, கருப்பாயூரணி - 4 மாடுகளும், அருண்பாண்டி, கருப்பாயூரணி - 2 மாடுகளும் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மாடுபிடி வீரர்கள் 17 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர், பார்வையாளர்கள் 1 என மொத்தம் 32 காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல்சிகிச்சைக்காக 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






