

அவினாசி,
திருப்பூர் மாவட்டம், அவினாசி போலீஸ் நிலையம் அருகில் அரசு தொடக்கப் பள்ளி கடந்த 80 ஆண்டுகளாக செயல்படுகிறது. தற்போது 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மொத்தம் 359 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி இன்று காலை பள்ளி முன் குழந்தைகளுடன் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு சரிவர பாடம் கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
இந்த நிலையில் இப்பள்ளியில் போதிய ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று தொடக்ககல்வி அலுவலகம், உதவி தொடக்ககல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்த பின் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வாரத்தில் ஒரிரு நாட்கள் மட்டுமே வருகிறார்கள்.
இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. இப்பள்ளிக்கு 11 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய நிலையில் 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.எனவே போதிய அளவு ஆசிரியகள் நியமிக்க வேண்டும் என்றனர். தகவல் அறிந்து வந்த அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பவுல்ராஜ், உதவி தொடக்ககல்வி அலுவலர்கள் மகேஸ்வரி, சுமதி விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுபற்றி கல்வி துறைக்கு பரிந்துரை செய்து தகுந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தற்போது உள்ள டெப்டேசன் ஆசிரியர்கள் தொடர்ந்து இங்கு பணிபுரிய உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி தொடக்ககல்வி அலுவலர் உறுதிகூறிய பின் 2 மணிநேரமுற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு குழந்தைகள் வகுப்பறைகளுக்கு சென்றனர்.