பராசக்தி வசனத்தை பேசி பள்ளியில் பரிசு பெற்றவர் ஏவிஎம் சரவணன்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

கருணாநிதிக்கும் ஏவிஎம் நிறுவனத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை விருகம்பாக்கம் பள்ளியில் மறைந்த பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல் ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏ.வி.எம்.சரவணனின் திருவுருவப்படத்தை திறந்து வைத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஸ்டாலின் பேசியதாவது; ”ஏவிஎம் நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவை பற்றி பேசவே முடியாது. பராசக்தி வசனத்தை பேசி பள்ளியில் பரிசு பெற்றவர் ஏவிஎம் சரவணன். ஏவிஎம் நிறுவன பொன் விழாவில் 190 கேடயங்களை மேடையில் நின்று கொண்டே கருணாநிதி வழங்கினார். கருணாநிதிக்கும் ஏவிஎம் நிறுவனத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு.
நான் மேயராக இருந்த போது பள்ளி மாணவர்களை விமானத்தில் திருப்பதி அழைத்து செல்ல ஏவிஎம் சரவணன் காரணமாக இருந்தார். என்னதான் சட்டம் போட்டாலும் திருட்டு விசிடியை கட்டுப்படுத்த முடியாது என்று ஏவிஎம் சரவணன் கூறினார். கூத்து அழிந்து நாடகம் பிறந்தது, நாடகம் அழிந்து சினிமா பிறந்தது; அதேபோல, காலத்திற்கு ஏற்ப கலை வடிவம் மாறும் என்று கூறியவர் ஏவிஎம் சரவணன்” இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.






