நீலகிரிக்கு பயணத்தை தவிர்த்திடுக - சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து, மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரிக்கு பயணத்தை தவிர்த்திடுக - சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக பர்லியார் அருகே திடீரென மண் சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

கனமழை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீடித்து வரும் கனமழையின் காரணமாக, நீலகிரி மலைப் பாதைகளின் பல்வேறு இடங்களில் உள்ள மண் தளர்வடைந்து சாலைகளில் சரிந்து விழுந்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.

இதனிடையே பர்லியார் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிர்பாராத விதமாக சாலையில் ஏற்பட்ட மண் சரிவு குவியலுக்குள் சிக்கிக் கொண்டது. இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மண் குவியல்

அதிர்ஷ்டவசமாக, மண் சரிவில் பேருந்து சிக்கிய உடனேயே அதில் பயணம் செய்த 6 பயணியரும் எந்தவித காயமுமின்றிப் பத்திரமாக வெளியேறினர். மண் குவியலுக்குள் சிக்கித் தவித்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அந்தப் பகுதியில் சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினரும், உள்ளூர் நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 நாட்களுக்கு

மலைப் பாதையில் தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு பயணத்தை தவிர்த்திடுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவினை சீரமைக்கும் பணிகளை நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு செய்தார்.

மண் சரிவு

குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து, மண் சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மலைப்பாதையில் பயணிக்க வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com