தமிழ்மொழியில் நாகரிகம், பண்பாடு பற்றி வெளியிடும் பத்திரிகைகளுக்கு சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு

தமிழ்மொழியில் நாகரிகம், பண்பாடு பற்றி வெளியிடும் நாளிதழ், வார இதழ், மாத இதழ் ஆகியவற்றில் தலா ஒன்றுக்கு சி.பா.ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித்தார்.
தமிழ்மொழியில் நாகரிகம், பண்பாடு பற்றி வெளியிடும் பத்திரிகைகளுக்கு சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று முற்பகல் கேள்வி நேரம் முடிந்ததும், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்வி களுக்கு பதில் அளித்து செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் பேசினர். அப்போது தங்களது துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் கள் வெளியிட்டனர்.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழ்மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை போற்றியும், பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வாரஇதழ் மற்றும் மாதஇதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழைத் தெரிவு செய்து தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.

இவ்விருது ஒவ்வொன்றிற்கும் விருதுத் தொகையாக ரூ.1 லட்சமும், கேடயம், பாராட்டிதழ் மற்றும் பொன்னாடையும் வழங்கப்பெறும். இவ்விருதுக்கென தொடர் செலவினமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆன்மிக தொண்டாற்றும் ஒருவருக்கு அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதிச் சான்றும் பொன்னாடையும் வழங்கப்பெறும். இவ்விருதுக்கென ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அதேபோல், தமிழறிஞர் ஒருவருக்கு தேவநேயப் பாவாணர் பெயரில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதிச் சான்றும், பொன்னாடையும் வழங்கப்படும். இவ்விருதுக்கென ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்த் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு காரைக்கால் அம்மையார் பெயரில் புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.

வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் தொண்டாற்றிவரும் தமிழறிஞர் ஒருவருக்கு வீரமாமுனிவர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.

வாரணாசி இந்து பல்கலைக் கழகத்தில் அயல்மொழியினருக்கு எளிதாகவும், விரைவாகவும் தமிழ் கற்பிக்கும் வகையில் மொழி ஆய்வுக்கூடம் தொடங்கப்படும். அந்த பல் கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் மயங்கொலிச் சொல்லகராதி உருவாக்கப்பட்டு எழுதுபொருள் அச்சுத்துறையின் மூலம் அச்சிட்டு வெளியிடப்படும். மேலும், தமிழ் மரபுத்தொடர் அகராதி உருவாக்கப்பட்டு எழுதுபொருள் அச்சுத்துறையின் மூலம் அச்சிட்டு வெளியிடப்படும். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் சொல்வயல் என்ற பெயரில் மாதஇதழ் தொடங்கப்படும்.

உலகத் தமிழ்ச் சங்கம் வாயிலாக உலகத் தமிழ் அமைப்புகள் 2-ம் தொகுதி நூல் வெளியிடப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

திருக்குறளை உலக நூலாக ஐக்கிய நாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பின் மூலம் (யுனெஸ்கோ) அங்கீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com