தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
x

தமிழக அரசின் விருது பெற விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் உணவு விநியோகிக்கவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு, அதாவது வருடாந்திர விற்றுக் கொள்முதல் ரூ.12 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவு வணிகர்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.

அதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றும், அவ்விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் தலைமையிலான நியமன அலுவலர் உள்ளடக்கிய குழுவினர் பரிசீலனை செய்து, கூட்டாய்வுக்குழு சம்பந்தப்பட்ட உணவகத்தினை கள ஆய்வு செய்து, தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமர்ப்பிக்கும் என்றும், அதன் பின்னர், மாநில அளவிலான பரிசீலனைக் குழு பரிசீலித்து, மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகங்களாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

சிறந்த உணவகங்களுக்கான விருதில் பங்கேற்க அவசிமானத் தகுதிகள்:

1. விண்ணப்பதாரர் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம்/ பதிவுச் சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரரின் உணவகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

3. விண்ணப்பதாரரின் உணவகத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு, சுகாதார மதிப்பீட்டுச் சான்று (Hygiene Rating Certificate) பெற்றிருக்க வேண்டும்.

5. விண்ணப்பதாரரின் உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதிக ஆபத்துள்ள உணவு வணிக வகைக்கான தணிக்கை (High Risk Audit by Third – Part Audit Agency) மேற்கொண்டு அறிக்கை வைத்திருக்க வேண்டும்.

6. விண்ணப்பதாரர் தமது உணவகத்தை உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தினால் வழங்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு, அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே அனைத்து உணவு வணிகர்களும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றைத் தவிர்த்து, மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களைப் பயன்படுத்தி, சுற்றுப்புற சூழலை மேம்படுத்த உதவுவதுடன், தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையின் விருதையும் வெல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு இணை இயக்குநர் வேளாண்மை கட்டிட தரைதளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி மாவட்டம்- 628101, என்ற முகவரியில் அமைந்துள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அலுவலகத்தினை அணுகலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story