திண்டுக்கல், பழனியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

திண்டுக்கல், பழனியில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
Published on

திண்டுக்கல், பழனியில் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

விழிப்புணர்வு மாரத்தான்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பழனி உட்கோட்ட போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம், பழனியில் நேற்று நடைபெற்றது. போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. சரவணன் தலைமை தாங்கினார். துணை சூப்பிரண்டு சரவணன் முன்னிலை வகித்தார். பின்னர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை எடுத்தனர். தொடர்ந்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஓட்டம் பழனியில், புதுதாராபுரம் சாலை, நகராட்சி சாலை, திருவள்ளுவர் சாலை, திண்டுக்கல் சாலை, சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை, திருஆவினன்குடி சாலை, குளத்து ரோடு பைபாஸ் சாலை வழியாக சென்று பழனி போலீஸ் நிலையத்தில் முடிவடையும் வகையில் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு இலக்கு நிர்ணயக்கப்பட்டு இருந்தது. இதில் பழனி பகுதி மட்டுமின்றி வெளியூரை சேர்ந்தவர்கள், பெண்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஓட்டத்தில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 23) என்ற கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்தார். பின்னர் நடந்த பாராட்டு விழாவில் முதல் 7 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசும், பதக்கமும் வழங்கப்பட்டது. அதேபோல் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் துறை சார்பில் திண்டுக்கல்லில் நேற்று விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஓட்டத்தை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் சீலப்பாடி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், சீலப்பாடி, நந்தவனப்பட்டி, அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம், செட்டிநாயக்கன்பட்டி பிரிவு வழியாக அஞ்சலி ரவுண்டானா சென்று மீண்டும் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் முடிவடைந்தது. இதில், போலீசார், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓடினர்.

பின்னர் மாரத்தான் ஓட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் அய்யம்பாளையத்தை சங்கிலிதினேஷ் முதலிடமும், திண்டுக்கல்லை சேர்ந்த சந்தானம் 2-ம் இடமும், குஜிலியம்பாறையை சேர்ந்த தினேஷ் 3-ம் இடமும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் நத்தத்தை சேர்ந்த நேகா முதலிடமும், யாழினி 2-ம் இடமும், திண்டுக்கல் பள்ளி மாணவி ஹில்டா ஹார்ஸ் வால்ட்ரியா 3-ம் இடமும் பிடித்தனர். பின்னர் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரம், 2, 3-வது இடம் பிடித்தவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் முதல் 10 இடம் பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமாமேரி ஆகியோர் வழங்கினர். இதில், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ், தடகள சங்க செயலாளர் துரைராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com