சென்னையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு

கலைநிகழ்ச்சிகள் வாயிலாக தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடன் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
சென்னையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு
Published on

சென்னை,

சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” எனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு வகைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இன்று (11.04.2026) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிண்டி கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலையத்தில் வெளிப்பகுதி, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரிஸ் கார்னர் பகுதியில் நாட்டுப்புறக் கலைஞர்களின் பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் மூலமும், திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதி, நேரு பூங்கா தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதியில் புலியாட்டம் மற்றும் சண்டமேளம் மூலமும், தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதி, நடேசன் பூங்காவில் பறை, நாட்டுப்புற நடனம், சிலம்பம், புலியாட்டம் மற்றும் கரோக்கி நிகழ்ச்சிகள், மெஹந்தி கலைஞர் மூலம் மெஹந்தி வரைதல் மூலமும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, மெரினா கலங்கரை விளக்கப் பகுதியில் நாட்டுப்புற நடனம், இசைக்குழு, கானா, டிஜே, திடீர் நடனக் குழு (Flashmob) உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் வாயிலாக தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடன் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், பெரிய அங்காடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com