

பனமரத்துப்பட்டி:
குறைபிரசவம்
சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி பார்வதி (வயது 36). கணவன்-மனைவி இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கஜேந்திரன் (3), பூமிகா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மீண்டும் பார்வதி, 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து கணவன்-மனைவி இருவரும் கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தெரியாமல் மறைத்து வந்துள்ளனர்.
இறந்து பிறந்த குழந்தை
இந்தநிலையில் நேற்று மதியம் கணவன்-மனைவி இருவரும் மல்லூர் அருகே நாழிக்கல்பட்டி கிராமம் துர்க்கை அம்மன் கோவில் அருகில் உள்ள கரட்டு பகுதிக்கு வந்து உள்ளனர். அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவரே பிரசவம் பார்த்துள்ளார். அதே நேரத்தில் குழந்தை இறந்து பிறந்ததை கண்ட கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தை பிறந்ததை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாது என்பதால் இறந்துபோன குழந்தையை அங்கேயே புதைத்து விடலாம் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பூபதி துர்க்கை அம்மன் கோவில் பின்புறம் ஒரு காட்டில் குழியை தோண்டி அதில் குழந்தையை புதைத்துள்ளார்.
தாயும் சாவு
பின்னர் பார்வதி தனக்கு உடல்நிலை மிகவும் முடியவில்லை, தாகமாக உள்ளது? ஏதாவது குடிக்க வாங்கி வாருங்கள் என பூபதியிடம் கூறியுள்ளார். உடனடியாக பூபதி கடை பகுதிக்கு வந்து தண்ணீர் வாங்கிக்கொண்டு சென்று பார்வதிக்கு கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் பார்வதியும் அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இதைக்கண்ட பூபதி திகைத்து போய் செய்வதறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூபதி புதைத்த குழந்தையின் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.