அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
Published on

சென்னை,

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல் சிறையில் உள்ள 17 பேருக்கும் கொடுக்கப்பட்டது.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டால் 17 பேரும் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெற முடியாது. சிறைவாசம் அனுபவித்தாக வேண்டும். பின்னர் கடந்த வருடம் ஜனவரியில் இந்த வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 28ந்தேதி தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை போக்சோ நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை இன்று மேற்கொண்டது. இதில் 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.

குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com