ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்


ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்
x

கோப்புப்படம் 

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால், அவர்களுக்காக சிறப்பு மலை ரெயில் சேவை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ வசதியாக சிறப்பு மலை ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே நாளை (சனிக்கிழமை), 30-ந்தேதி, செப்டம்பர் 5, 7 ஆகிய தேதிகள், அக்டோபர் 2, 4, 17, 19 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும்.

மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 31-ந் தேதி, செப்டம்பர் 6, 8 ஆகிய தேதிகள், அக்டோபர் 3, 5, 18, 20 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மேலும் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளியை முன்னிட்டு குன்னூர்- ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் செப்டம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகள், அக்டோபர் 2, 3, 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வந்தடையும். ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும்.

ஊட்டி- கேத்தி - ஊட்டி இடையே 3 ரவுண்டு ஜாய் ரைடு சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. முதல் சுற்று ஊட்டியில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடையும். 2-வது சுற்று ஊட்டியில் 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வந்தடையும். 3-வது சுற்று ஊட்டியில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வந்தடையும்.

இந்த சேவைகளில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், 2-ம் வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும். இந்த சிறப்பு மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story