கோவையில் 3 நாட்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார்.
கோவையில் 3 நாட்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை
Published on

கோவை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் கோவை வந்தார். கோவைக்கு அவரது திடீர் வருகையை தொடர்ந்து நிருபர்கள் பேட்டி காண முயற்சித்தனர். ஆனால் அவர் பேட்டி அளிக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

அவரது கார் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்ய சாலைக்கு இரவு 7 மணிக்கு சென்றடைந்தது. இந்த வைத்திய சாலை கேரள ஆயுர்வேத முறையில் புத்துணர்வு அளிக்கும் சிகிச்சைகளுக்கு பெயர் பெற்றது ஆகும். அங்கு அவர் வருகிற 27-ந் தேதி வரை (சனிக்கிழமை) தங்கியிருந்து சிகிச்சை பெறுகிறார்.

ஆயுர்வேத சிகிச்சை

ஓ.பன்னீர்செல்வம் கோவை வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவர் வருகை கோவையில் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கு கூட தெரியவில்லை. ஓ.பன்னீர் செல்வம் கோவை ராமநாதபுரம் ஆர்ய வைத்ய சாலையில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார். அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்பது குறித்து ஆர்ய வைத்ய சாலை டாக்டர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினருக்கு தான் ஆர்ய வைத்ய சாலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக முதலில் தகவல் வந்தது, ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தான் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்று பின்னர் தெரிய வந்தது.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்ய சாலையில் இதற்கு முன்பு மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு வருபவர்களுக்கு கேரள ஆயுர்வேத முறையில் புத்துணர்வு அளிக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம். அதுபோல தான் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com