அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவமனை தொடங்கப்படும்; மத்தியமந்திரி ஸ்ரீபட் யாசோ நாயக் பேட்டி

அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவமனை தொடங்கப்படும் என மத்தியமந்திரி ஸ்ரீபட் யாசோ நாயக் கூறினார்.
அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவமனை தொடங்கப்படும்; மத்தியமந்திரி ஸ்ரீபட் யாசோ நாயக் பேட்டி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்தியமந்திரி ஸ்ரீபட் யாசோ நாயக் நேற்றுகாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து மாவட்டத்திலும் ஆயுஷ்(ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) மருத்துவமனை அமைக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.10 கோடியே 5 லட்சம் நிதியை வழங்க உள்ளோம். இந்த மருத்துவமனையை அந்தந்த மாநில அரசுகள் நடத்தும். 2016 - 17-ம் ஆண்டில் தேனி, திருவண்ணாமலையில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூலிகை தாவரங்களைக் காத்தல், வளர்த்தல், இயற்கையை மீட்டுருவாக்கம் செய்தல், அழியும் நிலையில் உள்ள மூலிகைத் தாவரங்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றிற்காக தமிழ்நாடு வனத்துறைக்கு ரூ.5 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும், இந்த ஆண்டிலும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்துக்கு 5 அல்லது 6 தேசிய ஆயுஷ் நிறுவனம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையை போன்று ஆயுர்வேத மருத்துவமனையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைப்பார்.

ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி யோகா நாள் என பிரதமர் மோடி 2015-ம் ஆண்டில் அறிவித்தார். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, இதற்கு 177 நாடுகள் ஆதரவு அளித்தன. 2016-ம் ஆண்டில் மீதமுள்ள நாடுகளிலும் யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டன. நிகழாண்டு ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் யோகா நாள் கொண்டாடப்படவுள்ளது. இதன் விளைவாக உலக அளவில் கிட்டத்தட்ட 12 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவை தொடர்பான ஆய்வு இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயுஷ் இயக்கத்தின் கீழ் சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவமனைகளுக்கு டாக்டர்களை தனியாக நியமிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளோம். 3 ஆண்டுகளில் தேசிய அளவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்கி வருகிறது. இதற்கான செலவுகளையும் மத்திய அரசு ஏற்கிறது.

தூய்மை இந்தியா திட்டம் ஒவ்வொரு மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்தியஅரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாமல் இருந்த 28 கோடி பேருக்கு மத்தியஅரசு வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளது. கந்து வட்டியில் இருந்து சிறு தொழில் செய்பவர்களை காக்கும் வகையில் முத்ரா வங்கி திட்டத்தை மத்தியஅரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தஞ்சை ரெயில் நிலையம் முன்பு பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை தொடங்கி வைத்த மத்தியமந்திரி அங்கு கிடந்த குப்பைகளை பா.ஜனதா நிர்வா கிகளுடன் இணைந்து அகற்றினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com