பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திருச்செந்தூரின் புது அடையாளம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அமைக்கப்பட்டு இருப்பது மணிமண்டபம் மட்டுமல்ல. அவரின் புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடமாக அமையும்.
பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திருச்செந்தூரின் புது அடையாளம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
Published on

விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

புராண காலத்தில் திருச்செந்தூர் மண், அசுரர்களை அழித்து தேவர்களை காத்த மண். முருகனின் இரண்டாம்படை வீடு திருச்செந்தூர். முருகனுக்கு துணையாக இருந்த வீரபாகு போன்று, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிக்கு துணையாக இருந்து வருகிறார். ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற தலைவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமான நிகழ்வுகளை நடத்தி அனைத்து மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வருகிறார். திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அமைக்கப்பட்டு இருப்பது மணிமண்டபம் மட்டுமல்ல. அவரின் புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடமாக அமையும். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கவேண்டும், பாமர மக்களுக்கும் எளிய முறையில் செய்தியை தெரிவிக்கவேண்டும் என்பதற்காக தமிழ் உணர்வோடு செயல்பட்ட பத்திரிகை தான் தினத்தந்தி. அந்த பத்திரிகையை சி.பா.ஆதித்தனார் எவ்வாறு சிறப்பாக நடத்தினாரோ, அதேபோன்று தந்தை வழியில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மேலும் சிறப்போடு நடத்தினார். தினத்தந்தி இந்திய அளவில் நம்பர் ஒன் நாளிதழ் என்ற பெருமையை அடையச் செய்தார். மேலும் அவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், கைப்பந்தாட்ட தலைவராகவும், இந்த பகுதிகளில் ஆலயங்கள் அமைக்கவும், பள்ளிகள் அமைப்பதற்கும் அள்ளி கொடுத்து கொடை வள்ளல் என்ற பட்டத்தை பெற்றார். அய்யாவுக்கும், சின்னய்யாவுக்கும் பெருமை சேர்த்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இது ஒரு வரலாறாக அமையும். இந்த மணிமண்டபம் திருச்செந்தூரின் புது அடையாளம். தினத்தந்தி நாளிதழ் நம்பர் ஒன் என்று சொன்னால், அந்த நாளிதழ் அதிபருக்கு பெருமை சேர்ந்தவர் நம் நம்பர் ஒன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.49 ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வழங்கியவர் முதல்-அமைச்சர். தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தி செய்யும் மாவட்டம். உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்பார்கள். அதன்படி நாம் அரசுக்கு ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com