

சென்னை,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சீமா அகர்வால் கடந்த மாதம் (ஜூன்) ஓய்வு பெற்றார். கடந்த 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், தமிழ்நாடு காவல்துறையில் பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து திறமையாக பணியாற்றியுள்ளார். இவர் காவல் துறை பணியோடு சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். பணியில் இருந்தபோதே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடம் நடத்தினார்.
இந்தநிலையில் ஓய்வு பெற்ற சீமா அகர்வால், தனது சமூக பணிக்கு ஓய்வு கொடுக்காமல், சென்னை தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 6, 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணித பாடம் நடத்துகிறார். இதற்காக அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததில் மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அவர் தனது ஆசிரியை பணியை தொடங்கியுள்ளார். காலையில் தலா 40 நிமிடம் என 2 பாட வேளையை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து சீமா அகர்வால் 'தினத்தந்தி' நிருபரிடம் கூறுகையில், "பணி ஓய்வு பெற்ற பின் ஏழை மாணவர்களுக்காக சிறு சேவையாக இதனை செய்கிறேன். 'கற்றலில் மகிழ்ச்சி' என்பதில் மாணவர்கள் எளிதில் புரிந்து படிக்கும் வகையில் ஆங்கிலம், கணித பாடங்களை நடத்துகிறேன்.
மாணவர்களுக்கு வீட்டில் சொல்லிக்கொடுப்பதற்கு சில நேரங்களில் பெற்றோரால் முடியாது. அதனால் என்னால் முடிந்த சிறு உதவியாக ஒரு அம்மாவாக இருந்து செயல்படலாம் என நினைத்து இதனை நடத்தி வருகிறேன்" என்றார்.
சீமா அகர்வால் நடத்தும் பாடமுறை எளிதில் புரியும் வகையில் இருப்பதாக மாணவர்கள் நெகிழ்ச்சி அடைகின்றனர். மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், உதவிகளை வழங்குவதால் அவர்களும் உற்சாகமாக கற்கின்றனர். அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர், ஆசிரியையாக மாறி, மாணவர்களுக்காக நேரத்தை ஒதுக்கி சீமா அகர்வால் ஆற்றி வரும் கல்வி சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.