பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னை,

சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு சலுகைகள்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

1. தமிழ்நாடு அரசால் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் /மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 12 அரசு கல்லூரி மாணவர் விடுதி மற்றும் 6 அரசு கல்லூரி மாணவியர் விடுதிகள் ஆக மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

2. பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

3. விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

* அனைத்து விடுதி மாணவ/மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்

* கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ/மாணவியருக்கு ஜமக்காளம் வழங்கப்படும்.

* விடுதிகளில் தங்கிப் பயிலும் அனைத்து மாணவ/மாணவயிர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைபோர்வைகள் வழங்கப்படும்.

4. விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகள்

. பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்

இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.

5. தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்/காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்படோர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

வருமான சான்றிதழ்கள்

6. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்/காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 15.07.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போதுமட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

7.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே கல்லூரி மாணவ/மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com