

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு முதல் மோசமான வானிலை நிலவியது. இதனால் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய கொல்கத்தா, டெல்லி, சென்னை, புவனேஸ்வர், மும்பை, சூரத், கோலாலம்பூர், ஹாங்காங் உள்பட 14 விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன.
இதன் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கு அடுத்தடுத்து 14 விமானங்களும் வந்து அவசரமாக தரையிறங்கின.
இந்த விமானங்களில் வந்த பயணிகள் விமானங்களை விட்டு கீழே இறக்காமல் விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டனர். உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடுகளை விமான நிறுவன அதிகாரிகள் செய்து கொடுத்தனர். விடிய விடிய பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் பெருமளவு வந்து தரை இறங்கி கொண்டிருந்த நேரத்தில் பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் சென்னையில் வந்து தரை இறங்கியது.
இதனால் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தரை தள பணியில் உள்ள லோடர்கள் சமாளிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதையடுத்து கூடுதலாக கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாரிகளும், தரை தள ஓடுபாதை பகுதிக்கு கூடுதல் லோடர் ஊழியர்களும் அவசரமாக வரவழைக்கப்பட்டு சமாளித்தனர். பெங்களூருவில் வானிலை சீரடைந்த பின் விமானங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தாமதமாக புறப்பட்டு சென்றன.