

கோவை,
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்த கங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது.
பெரியார் அறிவுலகத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 11 மணிக்கு கோவை விமானம் நிலையம் வந்தார். பின்னர் அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரம் ரோடுஷோ சென்றபடி மக்களை சந்தித்தார். பின்னர், காந்திபுரத்தில் பெரியார் அறிவு உலகத்தை திறந்து வைத்தார்.
கோவையில் விழா முடிந்ததும் மதியம் 2 மணியளவில், கேரளாவிற்கு செல்ல முதல் அமைச்சர் விஜய் செல்ல திட்டமிட்டு இருந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து , ஹெலிகாப்டர் மூலம் திருச்சூர் செல்லும் வகையில் விஜய்யின் பயண திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. திருச்சூரில் நடைபெறும், நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் திட்ட்மிட்டு இருந்த நிலையில், கோவையில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. இதனால், விஜய் கேரளா புறப்படுவது தாமதம் ஆனது. தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து கொண்டு இருந்ததால், ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.
கேரளாவின் திருச்சூரிலும் பரவலாக மழை பெய்து வருவதாகவும் பலத்த காற்றும் வீச வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, விஜய்யின் பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. முதல் அமைச்சர் விஜய் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளும் ஹெலிகாப்டர் செல்ல உகந்த சூழல் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். இந்த நிலையில், முதல் அமைச்சர் விஜய்யின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, கோவையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். கொட்டு மழையிலும் தன்னை காண வந்திருந்த மக்களை பார்த்து குடை பிடித்தபடியே விஜய் திறந்த வேனில் நின்று கை அசைத்தபடி ரோடு ஷோவாக கோவை விமான நிலையம் செல்கிறார்.