ரூ.10 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

பொருளாதார குற்றங்கள் சமுதாயத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று கூறி, ரூ.10 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரூ.10 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

ரூ.10 ஆயிரம் கோடி மோசடி

சென்னையை தலைமையிடமாக கொண்டு சுரானா இண்டஸ்டிரியல் லிமிடெட் நிறுவனம், சுரானா பவர் லிமிடெட் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, கம்பெனியின் பங்கு மூலதனம் குறித்து பொய்யான விவரங்களைக் கூறி வங்கியில் கடன் வாங்கி ரூ.10 ஆயிரத்து 238 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தீவிர மோசடி புலனாய்வு முகமை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இந்த கம்பெனி நிர்வாகிகள் ராகுல் தினேஷ் சுரானா, தினேஷ்சந்த் சுரானா, விஜய்ராஜ் சுரானா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சம்பந்தம் இல்லை

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ராகுல் தினேஷ் சுரானா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கும், இந்த மோசடிக்கும் சம்பந்தம் இல்லை. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆடிட்டருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுதாரர் கேட்க முடியாது. ஆடிட்டர் இந்த கம்பெனியின் நிறுவனர் இல்லை. ஆனால், மனுதாரர் தலைமை செயல் அதிகாரியாக இருந்துள்ளார்.

பாதிப்பை ஏற்படுத்தும்

மனுதாரர், கம்பெனிக்கு புத்துயிர் கொடுக்கவும், மறுவாழ்வு அளிக்கவும் பாடுபட்டதாக ஒருபுறம் கூறிவிட்டு, மறுபுறம் மோசடி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆவணங்களை பார்க்கும்போது மோசடியில் இவரது பங்கு குறித்து பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதுபோன்ற மோசடி என்பது சமுதாயத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதுபோன்ற பொருளாதார குற்றம், சமுதாயத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. திடீரென வரும் கோபத்தால் செய்யும் குற்றங்கள் வேறு. ஆனால் நன்கு படித்தவர்கள், திட்டமிட்டு மோசடி செய்கின்றனர்.

தள்ளுபடி

இந்த குற்றச்செயலால் ஏற்படும் பின்விளைவு அவர்களுக்கு தெரியும். அதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று முன்கூட்டியே திட்டமிட்டு இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். படித்தவர்கள், செல்வாக்குமிக்கவர்கள், பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்களே இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர். எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com