

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வத்தாமன், பொன்னை பாலு, அஞ்சலை உள்பட 28 பேரை கைது செய்தனர். புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்தும் செய்தது.
இதை தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேருக்கு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மனு தாக்கல் செய்தார். இதே கோரிக்கையுடன் போலீசாரும் தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ராஜசேகர், "ஜாமீன் பெற்ற அஸ்வத்தாமன், ஹரிஹரன், பிரதீப் உள்பட 12 பேருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்கிறேன். இவர்கள் அனைவரையும் வருகிற மார்ச் 6ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சரண் அடைய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.