

மோசடி வழக்கு
கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது, போக்குவரத்து கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக அப்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி உள்பட 24 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி லோகேஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி. உள்பட 22 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். விசாரணையின் போது நீதிபதி, ‘வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது.
குறிப்பிட்ட காலத்துக்குள் அனைவரும் மனு தாக்கல் செய்ய வேண்டும். எப்போது மனு தாக்கல் செய்யப்படும் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.தேவையின்றி வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது. வழக்கில் இருந்து விடுவிக்க கோரி விருப்பம் போல் ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும்’ என்றார். இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை 17-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.