பக்ரீத் பண்டிகை: இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கு வாழ்த்துகள் - திருமாவளவன்

சோதனைகளைத் தாங்கும் உள்ளமும் ஈகம் செய்யும் அர்ப்பணிப்பும் வளர வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகை: இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கு வாழ்த்துகள் - திருமாவளவன்
Published on

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளில் இசுலாமியர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நபிகள் நாயகத்திற்கும் முன்னோடியான இப்ராஹிம் நபி தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட பெருமகன் ஆவார். தான் ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கை கொள்கைகளுக்காக தனது ஆருயிர் மகன் இஸ்மாயில் நபியையே பலியிடத் துணிந்தார் என்றும்; அப்போது இறைவன் இப்ராஹிம் நபியை தடுத்தாட்கொண்டு அவரது மகனைப் பலியிடும் செயலைத் தடுத்துநிறுத்தியதோடு, மாறாக ஆட்டுக்கிடாவைப் பலியிடுமாறு ஆணையிட்டார் என்றும்; அந்த இறைநம்பிக்கை , இறைப்பற்று, மகனையே ஈகம் செய்திட முன்வந்த துணிச்சல் ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடும் வகையில், இசுலாமியர்கள் இந்த நாளை பக்ரீத் பெருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். இதனை 'குர்பானி' எனவும் கொண்டாடுகின்றனர்.

இறைவனின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சுறுதியும், தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த ஈக உணர்வும் இப்ராகிம் நபியிடத்தில் மேலோங்கியிருந்ததை நபிகள் நாயகம் முகமது நபி உட்பட, அவரைத் தொடர்ந்து இஸ்லாமியப் பேரினம் என்றென்றும் நெஞ்சில் இருத்திப் போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும்.

எத்தகு சோதனைகளையும் தாங்கும் மனவலிமையும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக எதனையும் இழக்கத் துணியும் அர்ப்பணிப்பும் நம்மைப்போன்ற யாவருக்கும் வளர்ந்திட வேண்டும் என்பதே நமக்கு இந்தப் பெருநாள் உணர்த்தும் அறமாகும்.

இத்தகைய போற்றுதலுக்குரிய ஈகத் திருநாளில், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான 'ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை' மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com