

சென்னை,
மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணய கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது, அதன் நேரடி தாக்கமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து, பொதுமக்கள் பெரும் பொருளாதார சுமையை சந்திக்கும் சூழல் உருவாகும் என்ற கவலை எழுந்துள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலகட்டங்களிலும் மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் அதற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் பெரிய அளவில் குறைக்கப்படவில்லை. 2023-24 நிதியாண்டில் அரசு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன குறிப்பாக 2024 நிதியாண்டில் இருந்து தற்போது வரை ஏறக்குறைய 82000 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் லாபம் அடைந்துள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் முழு சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தாமல், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது வரி மற்றும் விலை நிர்ணயத்தில் சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடித்து, பொதுமக்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க, தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளின்படி சுமார் 5% வரை திருத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுங்க கட்டண உயர்வு போக்குவரத்து செலவினை மேலும் அதிகரித்து, அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கும் என்ற கவலை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறையினரிடையே எழுந்துள்ளது.
ஒருபுறம், தனிநபர் வாகன பயன்பாட்டை குறைத்து, பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் பாரத பிரதமர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மறுபுறம், பொது போக்குவரத்தில் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பேருந்து போன்ற வாகனங்களுக்கு எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வு தொடர்ந்து அமல்படுத்தப்படுவது, பொது போக்குவரத்து துறையின் செயல்பாட்டு செலவினை அதிகரித்து, அதன் சுமை பொதுமக்கள் மீதும் மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது என்ற கவலை எழுந்துள்ளது. எனவே, பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பேருந்து போன்ற சேவை வாகனங்களுக்கு எரிபொருள் விலை மற்றும் சுங்க கட்டணங்களில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும்.