

திருச்செந்தூர்,
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது.
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 14.11.2022 முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது ஐகோர்ட்டு உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில், கோவில் வளாகத்தில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, கோவிலில் இலவச பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண விரைவு தரிசன வரிசை, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை ஆகிய அனைத்து இடங்களிலும் பக்தர்களிடம் செல்போன் உள்ளதா? என்று போலீசார் சோதனையிட்டனர். மேலும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும் தீவிர சோதனை செய்தார்கள். கோவில் பாதுகாப்பு பணியாளர்களும் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதித்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், கிரிப்பிரகாரத்தில் 4 இடங்களில் செல்போன் வைப்பிடங்கள் உள்ளன. அங்கு ரூ.5 கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று செல்போனை பாதுகாப்பாக வைத்து செல்லவும், பின்னர் கோவிலில் இருந்து புறப்படும்போது டோக்கனை கொடுத்து செல்போனை திரும்ப பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கோவில் வளாகத்தில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றும், செல்போன்களை பாதுகாப்பாக வைப்பிடங்களில் வைத்து சென்று சாமி தரிசனம் செய்யுமாறும் கோவில் நிர்வாகம் சார்பில் ஒலிப்பெருக்கி மூலம் அடிக்கடி அறிவித்த வண்ணம் இருந்தனர்.