டாஸ்மாக் பார்களில் சிகரெட், பீடி, புகையிலை விற்பனை செய்ய தடை - தமிழக அரசு உத்தரவு

தண்ணீர் பாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார்களில் சிகரெட், பீடி, புகையிலை விற்பனை செய்ய தடை - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

டாஸ்மாக் பார்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புகையிலை விற்பனை செய்ய தடை

இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் பார்களில் சிகரெட், பீடி, புகையிலை விற்பனை செய்ய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீணிகள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விலைப்பட்டியல்

தின்பண்ட உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் தான் விற்பனை செய்யும் தின்பண்டங்களுக்கான விலைப்பட்டியலை பார்வைக்கு வைப்பதுடன் தின்பண்டங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும், சுத்தமாக பராமரிக்கப்பட்டதாகவும் அது தொடர்பான அரசின் அத்தனை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டனவாகவும் இருத்தல் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISI தரச்சான்று

இந்த தின்பண்ட பொருள்கள் உணவு பொருள் தரக்கட்டுபாடு (FSSAI) சோதனைக்கு உட்படுத்தப்படும். குளிர்பானங்கள், குடிநீர் ஆகியவற்றில் ISI தரச்சான்று பெற்றவையே பயன்படுத்த வேண்டும்.

மதுக்கூடத்தில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை வைக்கக்கூடாது. மதுக்கூடத்தில், கீற்றுக் கொட்டகை போன்றவை பயன்படுத்தல் கூடாது. தமிழக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மட்காத, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களை மதுபான சில்லரை விற்பனைக்கடைகளுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களில் பயன்பாட்டில் இருக்கக் கூடாது.

வேலை நேரம்

மதுக்கூடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட எந்த பொருளும் விற்கக் கூடாது. டாஸ்மாக் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் நேரத்தில் மட்டுமே மதுகூடங்கள் செயல்பட வேண்டும். நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் வேலை நேரத்தின்போது மட்டுமே ஒப்பந்ததாரருக்கு/அவரது பணியாளருக்கு மதுக்கூடத்தில் அனுமதியளிக்கப்படும்.

மது விற்கக்கூடாது

பார்களில் மது விற்கக்கூடாது. டாஸ்மாக் கடையின் விடுமுறை நாட்களிலோ அல்லது நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டோ மதுக்கூடம் திறந்து வைத்திருந்தால் உடனடியாக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மேலும் காப்புத் தொகையை திரும்பப் பெற இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com