பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து குடிநீர், குளிர்பானம் விற்க தடை

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து குடிநீர், குளிர்பானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து குடிநீர், குளிர்பானம் விற்க தடை
Published on

ஆய்வு கூட்டம்

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி பேசிய போது கூறியதாவது:-

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பைகள், குடிநீர் பாட்டில்கள், டம்ளர்கள், குளிர்பான பாட்டில்கள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றின் விற்பனையை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் கடைகளிலும் சோதனை நடத்த வேண்டும். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து குடிநீர், குளிர்பானம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகளிடம் சோதனை

கொடைக்கானல் நகருக்குள் வரும் வழிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி பணியாளர்கள் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், உடைமைகளை சோதனையிட்ட பின்னரே நகருக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். இந்த பணிக்காக கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதுதவிர என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் ஆகியோர் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், கொடைக்கானல் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com