நடிகர் அமிதாப் பச்சனின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த டெல்லி ஐகோர்ட்டு தடைவிதித்துள்ளது.
நடிகர் அமிதாப் பச்சனின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்த தடை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 80 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளில் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார். மும்பையில் தான் மிகவும் விரும்பி கட்டிக் கொண்ட அழகிய ஜல்சா வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர் தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும், அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.

இந்த நிலையில் நடிகர் அமிதாப் பச்சன், தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடைவிதிக்க கோரி டெல்லி ஐகோர்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி நவீன் சாவ்லா இன்று விசாரித்தார். அப்போது அமிதாப் பச்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் போலியான நிகழ்ச்சியில் லாட்டரி மோசடி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அமிதாப் பச்சனின் புகைப்படங்களை பயன்படுத்தி துணி, சுவரெட்டிகள் தயாரிக்கின்றனர்.

எனவே அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படங்கள், குரல் ஆகியவற்றை முன் அனுமதியின்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமிதாப் பச்சன் பெயர், போட்டோ, குரலை முன் அனுமதியின்ற பிறர் பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com