முக்கிய பணிகளில் இருக்கும்போது போலீசார் செல்போன் பயன்படுத்த தடை - போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு

முக்கிய பணிகளில் இருக்கும்போது போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முக்கிய பணிகளில் இருக்கும்போது போலீசார் செல்போன் பயன்படுத்த தடை - போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு
Published on

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

செல்போன் பயன்படுத்தக்கூடாது

* காவலர்கள் முக்கியமான வி.ஐ.பி. பாதுகாப்பு பணியில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது.

* சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இருக்கும்போதும், விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும்போதும் செல்போன்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

* மேற்கண்ட சமயத்தில் செல்போன்களை பயன்படுத்தினால் கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* முக்கிய சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணி, கோவில் திருவிழாக்கள், முக்கியமான போராட்டங்களின்போதும், பணியில் இருக்கும்போதும் செல்போனை பயன்படுத்தக்கூடாது.

அறிவுரையாக...

* உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்கண்ட தகவல்களை தங்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாருக்கு அறிவுரையாக வழங்க வேண்டும்.

* அனைத்து போலீஸ் நிலைய தகவல் பலகைகளிலும் இதுபோன்ற தகவல்களை எழுதி போடவேண்டும்.

* காலை நேரத்தில் அணிவகுப்பு நடத்தும்போதும் தினமும் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அறிவுரையாக எடுத்து சொல்லவேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

குறைகளை கேட்டார்

முன்னதாக சென்னை புதிய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், நேற்று காலை தனது அலுவலகத்துக்கு வந்து முறைப்படி பணிகளை தொடங்கினார். 8 மாடிகளிலும் ஏறி இறங்கி அலுவலக ஊழியர்களை சந்தித்து பேசினார். கேண்டீனுக்கு சென்று சாப்பாடு தரமாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

பின்னர் பொதுமக்கள் குறை கேட்கும் அறைக்கு சென்றார். அங்கு காத்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி முதல் முறையாக குறைகளை கேட்டறிந்தார்.

மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் அலுவலகத்துக்கும் சென்று பார்வையிட்டார். சுமார் 3 மணி நேரம் ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர், பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களை சந்தித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com