ஒரே குலையில் சிவப்பு-மஞ்சள் நிறத்தில் வாழைப்பழங்கள்... பொதுமக்கள் வியப்பு

ஒரே குலையில் சிவப்பு-மஞ்சள் நிறத்தில் வாழைப்பழங்களை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் பலரும் வாழை பயிரிட்டுள்ளனர். வாழைக்குலைகளை அறுவடை செய்து கடைகள், சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திசையன்விளை அற்புத விநாயகர் கோவில் சந்திப்பில் உள்ள ஒரு பழக்கடையில் செந்துளுவன் வகையை சேர்ந்த இந்த வாழைக்குலையின் ஒரு பகுதியில் பழங்கள் சிவப்பு நிறத்திலும், மற்றொரு பகுதியில் மஞ்சள் நிறத்திலும் இருந்தன. ஒரே வாழைக்குலையில் 2 நிறங்களில் பழங்கள் இருந்ததை அந்தப் பகுதி வழியாக சென்றவர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
மேலும் அந்த வாழைக்குலையில் உள்ள பழங்களை மிட்டாய்கள் தேர்வு செய்வதுபோல், ‘எனக்கு மஞ்சள் நிறத்தில் உள்ள பழத்தை கொடுங்கள், எனக்கு சிவப்பு நிறம் கொண்ட பழங்களை தாருங்கள்’ என போட்டிபோட்டு வாங்கி சென்றனர். இதனால் அந்த வாழைக்குலையில் உள்ள பழங்கள் முழுவதும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டன.






