கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு எதிரொலி; மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக டி.ஜி.பி. உத்தரவு

மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு எதிரொலி; மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக டி.ஜி.பி. உத்தரவு
Published on

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதைக் கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் கடந்த 18-ந் தேதி விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். அங்கு விவசாயிகள் தொடர்ந்து தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பெங்களூருவில் நேற்று முன்தினம் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

முழு அடைப்பின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் கர்நாடகா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. இதனிடையே, நாளை கர்நாடகாவில் 'பந்த்' நடைபெறுவதால் தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாநில எல்லைகளில் அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உயர் அதிகாரிகள் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழக எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரியில் பாதுகாப்பை பலப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ள டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கர்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com