வங்கி ஊழியர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகைகள் திருட்டு

உளுந்தூர்பேட்டையில் பிச்சை எடுப்பதுபோல் நடித்து வங்கி ஊழியர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகைகள் திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
வங்கி ஊழியர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகைகள் திருட்டு
Published on

உளுந்தூர்பேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவர், உளுந்தூர்பேட்டையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஜெனிபர் (வயது 27). வழக்கம்போல் நேற்று காலை ஸ்டீபன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். ஜெனிபர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

மாலை 4 மணி அளவில் 4 பெண்கள், அந்த தெருவில் பிச்சை எடுப்பதுபோல் நடந்து வந்தனர். அப்போது வீட்டில் இருந்த ஜெனிபரிடம், தண்ணீர் தருமாறு அவர்கள் கேட்டனர்.

10 பவுன் நகைகள் திருட்டு

உடனே அவரும், வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து, வெளியே வந்து அவர்களிடம் கொடுத்தார். பின்னர் 4 பெண்களும், ஜெனிபரின் கவனத்தை திசை திருப்பி பேச்சு கொடுத்தனர்.

அந்த சமயத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக மற்றொரு பெண், வீட்டுக்குள் புகுந்து, பீரோவை திறந்து அதில் இருந்த 10 பவுன் நகைகளை திருடினார். பின்னர் அந்த பெண், பின்பக்கம் வழியாக சென்று விட்டார். இதனை தொடர்ந்து 4 பெண்களும் அங்கிருந்து நைசாக புறப்பட்டனர்.

மடக்கிப்பிடித்த இளைஞர்கள்

இதனை தொடர்ந்து ஜெனிபர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையில் அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தன. அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. அப்போதுதான் அவருக்கு, தனது கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகைகளை பெண்கள் திருடிச்சென்றது தெரிந்தது.

உடனடியாக அவர், அக்கம்பக்கத்தினரை அழைத்துக் கொண்டு மாயமான பெண்களை தேடினார். அப்போது பக்கத்து தெருவில் 5 பெண்கள் நடந்து சென்றனர். உடனே ஜெனிபர், அந்த தெரு இளைஞர்கள் உதவியுடன் 5 பெண்களையும் மடக்கிப் பிடித்து, உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

5 பெண்கள் கைது

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 5 பேரும், ஈரோட்டை சேர்ந்த அய்யப்பன் மனைவி முத்தம்மாள்(38), கோபால் மனைவி மீனாட்சி(30), ஜீவா மனைவி கவிதா(28), சுப்புடு மனைவி மங்கம்மாள்(35), கண்ணன் மனைவி முனியம்மாள்(35) ஆகியோர் என்பதும், ஜெனிபரின் கவனத்தை திசை திருப்பி 10 பவுன் நகைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 10 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், 5 பெண்களும் பிச்சை எடுப்பதுபோல் தெருத்தெருவாக சுற்றி வருவதும், வீட்டில் தனியாக இருப்பவர்களை நோட்டமிட்டு தண்ணீர் கேட்பதுபோல் நடித்து திருட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுவதும் தெரிந்தது. இதுபோல் 5 பெண்களும் எந்தெந்த ஊர்களில் கைவரிசை காட்டியுள்ளார்கள்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com