

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி தனியார் வங்கியில் ரூ.1.21 கோடி கையாடல் செய்த மேலாளர் உள்பட 6 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் எச்.டி.எப்.சி. வங்கி கிளை இயங்கி வருகிறது. இதில் திருவண்ணாமலையை சேர்ந்த அன்பழகன் மகன் அரவிந்தன் (வயது 41) என்பவர் பிராந்திய குழு தலைவராக இருந்து வருகிறார்.
இந்த வங்கியின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 430 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. வங்கியில் பணிபுரியும் சில அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.1 லட்சம் கையாடல் செய்திருந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அரவிந்தன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வங்கியில் விற்பனை அதிகாரிகளாக பணியாற்றும் வி.பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரசாந்த் (27), தென்கீரனூரை சேர்ந்த ஆர்.பிரசாந்த், கடன் அதிகாரியான சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முள்ளுவாடியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கார்த்திக் (34), கடன் மேலாளரான ஆத்தூர் அப்பமசமுத்திரத்தை சேர்ந்த சீமராஜா மகன் சதீஷ்குமார் (37), காசாளரான கள்ளக்குறிச்சி சிறுவங்கூரை சேர்ந்த ரமேஷ் (33), ஆவணபதிவாளர் பெரும்பட்டை சேர்ந்த வினோத் மனைவி பிரியா (29) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், விற்பனை அதிகாரிகளாக பணியாற்றும் எஸ்.பிரசாந்த், ஆர்.பிரசாந்த் ஆகியோர் 23 மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் இருந்து ரூ.1 கோடியே 21 லட்சத்து 61 ஆயிரத்து 685-ஐ வாங்கிக்கொண்டு அதை வங்கி கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்திருப்பதும், இதற்கு கடன் அதிகாரி கார்த்திக், கடன் மேலாளர் சதீஷ்குமார், காசாளர் ரமேஷ், ஆவணபதிவாளர் பிரியா ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கார்த்திக் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.