வங்கி மேலாளரை காரில் கடத்தி ரூ.7 லட்சம் பறிப்பு: 2 பேர் கைது

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி மிலிட்டரி கேண்டீன் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
கைது
Published on: 

கடையநல்லூர்,

குற்றாலத்துக்கு குளிக்க சென்றபோது அருப்புக்கோட்டையை சேர்ந்த வங்கி மேலாளரை காரில் கடத்தி ரூ.7 லட்சம் பறித்த கும்பலை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கிரைண்டர் 'செயலி'

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 42). இவர் அங்குள்ள அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது செல்போனில் 'கிரைண்டர்' செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக வந்த பொன்னுச்சாமி, வழக்கம் போல் தனது செல்போனில் 'கிரைண்டர்' செயலியை பயன்படுத்தியுள்ளார்.

அப்போது 'செயலி' மூலம் அவரை மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு அறிமுகமாகி உள்ளார். இருவரும் பேசிக்கொண்ட நிலையில், அந்த நபர் கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி மிலிட்டரி கேண்டீன் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

காரில் கடத்தல்

இதன்பேரில் பொன்னுச்சாமி அங்கு சென்றார். அப்போது 'செயலி' மூலம் அறிமுகமான மர்ம நபர், டிரைவருடன் காரில் அங்கு வந்தார். அந்த நபர் திடீரென பொன்னுச்சாமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு கடத்தி சென்றார். தென்காசி சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, கடையநல்லூர் இடைகால் பஸ் நிறுத்தம் அருகே மேலும் 4 பேர் காரில் ஏறியுள்ளனர்.

அவர்கள் காருக்குள் வைத்தே பொன்னுச்சாமியை மாறிமாறி தாக்கி மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னுச்சாமி செய்வதறியாமல் பயத்தில் உறைந்தார். அந்த கும்பல் அவரது பையில் இருந்த ரூ.1,000 ரொக்கப்பணம், செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவற்றை பறித்தனர்.

ரூ.7 லட்சம் பறிப்பு

பின்னர், அவரை மிரட்டி கடவுச்சொல்லை கேட்டறிந்த கும்பல், கரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பொன்னுச்சாமியின் வங்கி கணக்கில் இருந்து ஏராளமான பணத்தை எடுத்துள்ளனர். ஆனாலும் ஆசை தீராத கும்பல் பொன்னுச்சாமியின் மற்ற வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டறிந்தனர்.

செல்போனில் இருந்து ஆன்லைன் மூலமாக பொன்னுச்சாமியின் விருதுநகர் கிளை வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம், ரூ.4 லட்சம் மற்றும் அருப்புக்கோட்டை கிளை கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சம் வரை பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

பணம் முழுமையாகப் பரிமாற்றம் செய்யப்படும் வரை பொன்னுச்சாமியை காரிலேயே அந்த கும்பல் ராஜபாளையம் வரை அழைத்து சென்றது. தங்களின் தேவை முடிந்தவுடன் அந்த கும்பல் சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு பொன்னுச்சாமியை கடையநல்லூர் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. பணத்தை பறிகொடுத்த பொன்னுச்சாமி கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதில், அவரிடம் பணம் பறித்தது நெல்லை சங்கர் நகர் வடக்கு சிதம்பர நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜன் (28), மேலப்பாளையம் சிவராஜபுரத்தைச் சேர்ந்த முத்துசெல்வன் (23) என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com