

சென்னை,
சென்னை கொளத்தூரை சேர்ந்த நிஹ்மத்துல்லா என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2023-ம் ஆண்டு தனியார் வங்கி ஒன்று, எனது அனுமதியின்றி ரூ.13.75 லட்சம் தனிநபர் கடன் அனுமதித்தது. பின்னர் அதில் இருந்து ரூ.9.5 லட்சத்தை உடனடியாக வேறு நபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியது.
இதன் பின்பு, கடனை திரும்ப செலுத்துமாறு வங்கி நிர்வாகம் எனக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியது. இந்த விவகாரத்தில் தவறான நடைமுறையை மேற்கொண்ட வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த ஆணையம், 'வங்கி நிர்வாகம் ஒரே நாளில் கடன் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.13.75 லட்சம் கடன் அனு மதித்த வகையிலும், அதில் இருந்து ரூ.9.5 லட்சம் உடனடியாக எடுக்கப்பட்டதை தடுக்கவும் வங்கி உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரிகிறது. இதன்மூலம் வங்கி சேவையில் குறைபாடு இருப்பதாக ஆணையம் தீர்மானிக்கிறது.
எனவே, சர்ச்சைக்குரிய கடன் கணக்கை முடித்து அதற்கான சான்றிதழை மனுதாரருக்கு வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும். சேவையில் ஏற்பட்ட குறைபாட்டுக்காக வங்கி நிர்வாகம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.