இன்று முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது..!

வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
வங்கிகள் செயல்படாது
Published on

சென்னை,

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளி முதல் திங்கள் வரை சேவை பாதிப்பு

வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண ஊழியர்களிடம் காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

வேலைநிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறையாலும், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கான நேரடி வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இணையவழி வங்கி சேவைகள் மற்றும் ஏ.டி.எம். உள்ளிட்ட சில சேவைகள் வழக்கம்போல் செயல்படலாம்.

இரண்டு கட்ட வேலைநிறுத்தம்

இதுகுறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக பொதுச்செயலர் ரோஷன் கார்க்கி கூறியதாவது:-

வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் உயர் அதிகாரிகளுக்கும், சாதாரண ஊழியர்களுக்கும் இடையே காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கண்டித்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இரண்டு கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும் நடைபெற உள்ளது.

இவ்வாறு ரோஷன் கார்க்கி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com