குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

நீர்வரத்து குறையும்பட்சத்தில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும். இதமான தென்றல் காற்று தொடர்ந்து வீசும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் சாரல் காரணமாக மரங்களும், தாவரங்களும் பசுமையாக காணப்படும்.
இந்த நிலையில், தென்மேற்குப் பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீர்வரத்து குறையும்பட்சத்தில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






