அப்பாவி உயிர்களைப் பறிக்கும் பேனர் கலாச்சாரம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக, தவெக கட்சிகள் “பேனர்” மோகத்தில் மூழ்கிக் கிடப்பது நீதிமன்ற அவமதிப்பதாகும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அப்பாவி உயிர்களைப் பறிக்கும் பேனர் கலாச்சாரம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Published on: 

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“தவெக இளைஞரணி நிர்வாகியின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் ஓமலூரின் வெள்ளாளப்பட்டி அருகே சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனரால், எதிரில் வந்த வாகனத்தை கவனிக்க முடியாமல் கல்லூரி மாணவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. தவெகவினரின் பேனர் மோகத்திற்கு, ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் பலியானது மன்னிக்க முடியாதது.

அதிலும் குறிப்பாக, தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், நெருக்கடி மிகுந்த முக்கிய சாலைகளில் தவெகவினரின் பேனர் அட்டூழியங்கள் பெருகி வருவதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், தவெக கட்சியின் தலைமையும் முதல்வருமான விஜய் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவாகவே தற்போது ஒரு உயிர் பலியாகியுள்ளது.

அதுமட்டுமன்றி, சாலையின் ஓரங்களிலோ, பொது இடங்களிலோ மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், அனுமதியின்றி பேனர்கள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்திய போதும் கூட, திமுக, தவெக போன்ற கட்சிகள் இத்தகைய “பேனர்” மோகத்தில் மூழ்கிக் கிடப்பது நீதிமன்ற அவமதிப்பதாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட இளைஞரணி நிர்வாகியை உடனடியாக கைது செய்வதோடு, தவெக பேனரின் காரணமாக உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com