

சிவகாசி,
முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழைாவ முன்னிட்டு சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கீர்த்தனா ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் ஒரு பிரிவாகவும் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்று காலை விசுவநத்தம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கீர்த்தனா வந்திருந்தார். அப்போது அவரது ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தின்போது திருமண மண்டபத்தின் வெளியே அமைச்சர் கீர்த்தனாவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் அதே பகுதிக்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி வந்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இந்த பகுதியில் மக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற மாவட்ட செயலாளர் மாரிச்செல்வத்திடம் மனு கொடுங்கள். அவர் எனது கவனத்துக்கு கொண்டு வருவார். நான் அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.