பி.ஏ.பி.4-ம் மண்டல பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா?

திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி.4-ம் மண்டல பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா?
பி.ஏ.பி.4-ம் மண்டல பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா?
Published on

தளி

திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி.4-ம் மண்டல பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாசனம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி.திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி வாய்க்கால் மூலமாக 2 ஆயிரத்து 786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை கை கொடுக்க வில்லை. இதனால் திருமூர்த்தி அணைப்பகுதி மற்றும் பாசனபரப்புகளில் கடும் வறட்சி நிலவி வந்தது. இதையடுத்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பும் வேகமாக உயர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் 4-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 20-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு ஒரு சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.

கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா?

இந்த நிலையில் பி.ஏ.பி.பிரதான கால்வாயில் பொள்ளாச்சி தாலுகா சீலக்காம்பட்டி அருகே உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக ஓரிரு கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் 7 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதிலும் பாசன நிலங்கள் முழுமையாக தண்ணீரை பெற இயலாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கு கருத்துரு அனுப்பி கால நீட்டிப்புக்கு அரசிடம் அனுமதி பெற்றனர்.

இந்த சூழலில் நேற்றுமுன்தினம் இரவுடன் பி.ஏ.பி. 4-ம் மண்டல பாசனம் முடிவுக்கு வந்தது. ஆனால் விவசாயிகள் தரப்பில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். மழை இல்லாததால் பி.ஏ.பி.தொகுப்பு அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்துவிட்டது. இனி மழை பெய்து அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டால் கருத்துரு அனுப்பி முறையாக அனுமதி பெற்று கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com