

சென்னை,
விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் 'பேரிகார்டுகள்' அமைப்பது கட்டாயம் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வளசரவாக்கம், அம்பத்தூர், மணலி, தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் நடைபெறும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் உள்பட முக்கிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதனையடுத்து, ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-
மழைநீர் வடிகால்களை அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதிக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆற்று நீர் கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் வண்டல்மண் அடைப்பதைத் தடுக்க நீர்வளத்துறை சார்பில் ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூவம் ஆற்று முகத்துவாரத்திலும், அடையாறு, முட்டுக்காடு மற்றும் வட சென்னை பகுதிகளிலும் அதிநவீன எந்திரங்கள் மூலமாக வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் வரை தொடர்ந்து நடைபெறும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களைக் கண்காணிக்க அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முழுமையான தடுப்புகள் (பேரிகார்டு) அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் 20 முதல் 30 இடங்களில் தற்காலிக வடிகால்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விடங்களில் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மெட்ரோ நிர்வாகம் கொண்ட கூட்டுத் தொழில்நுட்பக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.