

சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" என்ற படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தொடரை கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி, குயின் ஆகியவற்றை தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என்றும், தடை விதிக்க கோரியும் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான ஜெ. தீபா, உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. திரைப்படத்தையும், இணையதளத் தொடரையும் பார்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும், படத்தைப் பார்த்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இயக்குநர் விஜய் தரப்பில், '' 'தலைவி' திரைப்படம், 'தலைவி' என்ற பெயரில் வெளியான புத்தகத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்தப் புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை. தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை'' எனத் தெரிவிக்கப்பட்டது.
இணையதளத் தொடர் தயாரிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், ''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் தயாரிக்கப்படவில்லை. 'குயின்' என்ற புத்தகத்தைத் தழுவியே எடுக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டிலேயே இணையதளத் தொடர் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 25 கோடி ரூபாய் செலவில் தொடரைத் தயாரித்துள்ள நிலையில், விளம்பரத்துக்காக கடைசி நேரத்தில் தீபா வழக்குத் தொடர்ந்துள்ளார்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
தனது வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருந்ததாக மனுதாரர் கூறுவது பொய். 2002-ம் ஆண்டுக்குப் பின் ஜெயலலிதாவுடன் தொடர்பில் இல்லாத தீபா 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின் தான் வந்துள்ளார். அதனால் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய தீபாவுக்கு அடிப்படை உரிமை இல்லை என வாதிடப்பட்டது. வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஏற்கனவே கவுதம் வாசுதேவ் மேனன் தனது தொடரில் தீபா குறித்து கதாபாத்திரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட அடிப்படையில் தொடருக்குத் தடை விதிக்க முடியாது. 'தலைவி' படத்தில் முழுக்க முழுக்க இது கற்பனைப் பாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அதற்கும் தடை விதிக்க முடியாது என்று கூறி, நீதிபதி வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்தார். தலைவி படம் முழுக்க முழுக்க கற்பனையானது என அறிவிப்பு வெளியிடவும் பட நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.