இந்தியா சிமெண்ட்ஸ் என்.சீனிவாசனுக்கு விருது: தகுதி அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமனம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

பல்கலைக்கழகங்களுக்கு தகுதி அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
இந்தியா சிமெண்ட்ஸ் என்.சீனிவாசனுக்கு விருது: தகுதி அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமனம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
Published on

சென்னை,

அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் பவள விழா கொண்டாட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றுப்பேசினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பவள விழா கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரும், நிர்வாக இயக்குனருமான என்.சீனிவாசன் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். பவள விழா கொண்டாட்ட குழுவின் தலைவராகவும் இருக்கிறார். இவர் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் ரசாயன என்ஜினீயரிங் (1960-1965-ம் ஆண்டு) படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.

சிறந்த முன்னாள் மாணவர் விருதை என்.சீனிவாசனுக்கு, கவர்னர் வழங்கி கவுரவித்தார்.

இதேபோல மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக முன்னாள் செயலாளர் திருமலாச்சாரி ராமசாமி உள்ளிட்ட சிறந்த முன்னாள் மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:- வேகமாக வளர்ந்து வரும் நமது நாட்டில், உலகத்தரத்திலான பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதற்கான எதிர்கால தூண்களாக மாணவர்கள் திகழ்வார்கள். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 60 கோடிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இது மிகப்பெரிய சொத்து. அவர்களுக்கு முறையாக பயிற்சி கொடுத்து, மக்கள் சேவையில் ஈடுபடுத்தினால், மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

முன்னாள் மாணவர்கள் தான் கல்வி நிறுவனத்தின் ஹால்மார்க் (தரக்குறியீடு). வளர்ந்த நாடுகளில் கல்வி நிறுவனங்களை கட்டமைப்பதில், முன்னாள் மாணவர்களின் பங்கு உரித்தானது. அனைத்தையும் அடைய வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் ஏழையாக உணருவீர்கள். அடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ்ந்தால், நீங்கள் பணக்காரராக உணருவீர்கள்.

பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் வெளிப்படைத்தன்மையுடன் வாழ்ந்தால் மட்டுமே சிறப்பான வாழ்வை வாழ முடியும். போதும் என்ற தன்னிறைவோடு, எளிமையாக வாழ்ந்தால் ஊழலை முற்றிலுமாக ஒழித்து விடலாம். எனவே ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க இன்றைய மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும். நான் கவர்னராக பதவி ஏற்றபோது அண்ணா பல்கலைக்கழகத்தில் சில ஊழல்வாதிகள் இருப்பதாக, அப்போது என்னிடம் சிலர் கூறினார்கள்.

ஆனால் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்த ஊழல்களை அகற்றி ஊழலற்ற சிறந்த பல்கலைக்கழகமாக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா மாற்றியிருக்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர்களாக முன்பு தகுதி இல்லாதவர்கள் சிலர் இருந்தனர். ஆனால் தற்போது பல்கலைக்கழகங்களுக்கு தகுதியின் அடிப்படையிலேயே துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் என்.சீனிவாசன் பேசியதாவது:- மற்ற மாணவர்கள் சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் தொடர்பாக படித்தபோது, நாங்கள் ரசாயனம், ஜவுளி மற்றும் தோல் தொடர்பான தொழில்நுட்பம் குறித்து படித்தோம். அப்போது படிப்பு நேரத்தை தவிர்த்து, ரேடியோவில் பாட்டு கேட்பதும், விளையாடுவதும் தான் எங்களுடைய முதன்மையான பொழுதுபோக்காக இருந்தது. தனித்துவமான கல்லூரியில் புதிய தொழில்நுட்பம் குறித்து படித்தது, நல்ல அனுபவமாக இருந்தது.

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும்போது, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாட்டை பார்த்துவிட்டு, எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தலைவர் வித்யா சங்கர், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com