12 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்ததால், மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது.
மணிமுத்தாறு அருவி
கோப்புப்படம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.

தென்மேற்கு பருவமழை

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதன் காரணமாக கேரள மாநிலத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

குளிக்க அனுமதி

மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த சாரல் மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். கடந்த 12 நாட்களாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை குறைந்ததால், தற்போது அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 நாட்களுக்குப் பிறகு இன்று தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com