குற்றாலம் மெயின் அருவியில் 6 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குற்றாலம் மெயின் அருவியில் 6 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.
குற்றாலம் மெயின் அருவியில் 6 நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சீசன் காலதாமதமாக ஜூன் மாத இறுதியில் தொடங்கியது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மீண்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த வாரம் திடீரென மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு 5 நாட்களாக நீடித்தது. இதன் பிறகு மெயின் அருவியை தவிர மற்ற அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று அந்த அருவிகளில் குளிக்க மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். அதன்படி சுற்றுலா பயணிகள் நேற்று முதல் குளித்தனர். இன்று காலை வரை மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

பின்னர் காலை 10 மணிக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மெயின் அருவியில் குளிக்க கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார். அதன்படி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர். இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைத்து அருவிகளிலும் உற்சாகத்துடன் அவர்கள் குளித்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com