

திருக்காட்டுப்பள்ளி,
பூதலூர் அருகே வயல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 டிராக்டர்களில் பேட்டரிகளை திருடிசென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
உழவுப்பணி
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மாரநேரி கிராமத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கல்லணைக் கால்வாய் பாசன பகுதியிலும், வெண்ணாறு பகுதியிலும் குறுவை சாகுபடிக்கு வயல்களில் டிராக்டர்கள் மூலம் விவசாயிகள் உழவு செய்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை உழவு செய்து விட்டு டிராக்டர்களை வயலில் நிறுத்தி வைத்து விட்டு வந்து விடுகின்றனர்.
பேட்டரிகள் திருட்டு
இந்தநிலையில் வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்களில் இருந்து பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிசென்று விட்டனர். ஒரே நாள் இரவில் மாரநேரி கிராமத்தில் வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 டிராக்டர்களில் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து விவசாயிகள் பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் பேட்டரிகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.